October 19, 2011

வேண்டாம் உன் வேர்கள்


பச்சை போர்வை கட்டி
வான் தொடும் அவசரத்தில் 
ஓங்கி உயர்ந்த நீ 

உன் வேர்கள் என்னில் 
ஆழமாகப் புதைந்து
வியாபித்து துளைத்து
உள்ளே இன்னும் உள்ளே....

உன் ஆதிக்கத்தை 
நான் விரும்பவில்லை
எங்கோ இருந்து நீ
என்னில் நடப்பட்டது 
எனக்கு சம்மதமில்லை

நீ வளரும் ஆசையில் 
என்னில் நிலைகொண்டதை
உன் இருப்புக்காக என் 
சுயம் சுரண்டப்பட்டதில்
எனக்கு உடன்பாடில்லை

நீ கிளை பரப்பினாய்
இலை துளிர்த்தாய்
விழுது விட்டாய்
உன் வேர்கள் என் மேனியில்
ஒரு இடம் மிச்சமில்லாமல்
நீ உன் ஆயிரம் விழுது கரங்களால்
என்னை விழுங்கிவிட்டாய்
உன் சருகுகளால் நான்
காய்ந்து போனேன்..

உன்னை என்னில் இருந்து
பிடுங்கி எறிய மனம் துடிக்கிறது
உன் வேர்கள் தொட முடியாத
தூரத்திறகு ஓட வேண்டும்
உன் பச்சைவாசனை படாத
இடத்திற்க்கு நகரவேண்டும்

உன் வருகையால் 
நான் மழுங்கடிக்கப்பட்டேன்
நான் வானம் பார்த்து
பல நாளாகிவிட்டன
என்னில் மழையோ ஒளியோ
இப்போது விழுவதில்லை
நீ அதை விடுவதுமில்லை

உன் வேர்களை கடித்து
உமிழ நினைக்கிறேன்
ஆனால் நீயோ ஆழமாக
இன்னும் ஆழமாக...

நீ ஒரு மலட்டு மரமாய் 
இருந்திருந்தால் சற்றேக்குறைய
ஆறுதல் கண்டிருக்கலாம்
ஆனால் நீயோ வீரியமுள்ள 
விந்தாகிவிட்டாய்

இதோ உன்னில் 
ஏகப்பட்ட விதைகள்
இன்னும் ஆழமாய் அவையும்
எங்கேனும் வேரூன்றும்

ம்ம்ம்ம் போகட்டும் மரமே
என்னில் இருந்து என் பெண்மை,
கண்ணீர்,இரத்தம் ,என் சுயம்
எல்லாம் உன்னால் உறிஞ்சப்பட்ட
மொத்தமாக உறிஞ்சப்பட்ட
ஒரு பொழுதில் நீ வீழ்ந்து போவாய்
உன் வேர்களுக்கான நிலம் அற்றுப் போகும்
ஆமாம் சத்தியமாய் நீ வீழ்ந்து போவாய்

_ வைஷு

1 comment:

  1. ஆமாம் சத்தியமாய் நீ...

    மூலம் நல்ல கவிதை வைஷு..
    (Y)

    ReplyDelete