February 02, 2011

அவள் காதலுக்காக காத்திருந்தாள்

பாதியில் நின்ற படிப்பு
மேனியை இறுக்கும் பட்டு
தலை நிறைய கதம்பம்
மனம் முழுதும் ஆதங்கம்

பெண் பார்க்க வருகிறார்கள்
தாயாராய் இரு என்றார்கள்
கேட்டால் சொல்லலாம் என
ஒரு கவிதை கூட எழுதி வைத்தேன்

"சமைந்து விட்டாளா? "
"சமைக்க தெரியுமா ?"
முடிந்து விட்டது பேட்டி
இதற்கா இத்தனை போட்டி


அழுதேன் , தொழுதேன் ,
ஆயிரம் முறை அடித்துச் சொன்னேன் .
"காதலா ?"கதறினாள் அன்னை
"காலை உடைப்பேன் "எகிறினார் தந்தை

கவிதை என்றேன் ,கனவு என்றேன்
கற்பனையில் நான் கண்ட காதலன்
நிச்சயம் இவன் அல்ல என்று
எத்தனையோ தரம் சொல்லிப்பார்த்தேன்

ஆயிரமாயிரமாய் சம்பளம்
,ஆடம்பர வீடு
ஆங்கிலத்தில் பேச்சு
இவளுக்கென்ன ஆச்சு ??

அம்மாவின் அழுகை
அப்பாவின் அதட்டல்
அண்ணனின் சத்தம்
என் கனவுகள் தொலைந்ததே மிச்சம்

மனதிற்கு வேலி
கழுத்திற்கு தாலி
இனியென்ன தோழி ,
நான் ஆகி விட்டேன் கூலி

கடமை முடிந்ததென அங்கே கண்ணீர்
கனவு கலைந்ததென இங்கே செந்நீர்
விதியை நொந்துகொண்டே
விளக்கணைக்க சம்மதித்தேன்

அவள் காதலனுக்காய் காத்திருந்தாள்
பெற்றோரோ கணவனை கட்டி வைத்தார்கள்
கணவனிடம் காதலனை தேடிப்பார்த்தாள்
பாவம் அவன் வெறும் கணவன் தான்

என்றோ படித்தது ஏனோ ஞாபகம் வர
ஏக்கம் நிறைந்த மனதும்
தூக்கம் துறந்த விழியுமாய்  நான்

கண் , காது, கால் ,கை
அங்கமெல்லாம் வெறி கொண்டு
காயமே காமமாக கதற வைத்த கணவன்

முத்தம் என்ற பெயரில்
நித்தம் ஒரு யுத்தம்
மோக வெறியில் என்னை
மூழ்கடிக்கும் அவசரம்

கலர் கலராய் கனவுகளில்
ரோமியோவோடும் ,சாலீமுடனும்
அந்த மலைச்சாரலில் மன்மதனோடும்
துஷ்யந்த மயக்கத்தில் கவிதை பேசி
திரிந்த போதும் ..
சத்தியாமாய் எண்ணவில்லை
நிஜத்தில் துகிலுரியப்போவது
ஒரு துச் சாதனன்  என்று

விடிய விடிய உறவு
விடிந்த பின்னே உறக்கம்
கசக்கி எறியப்பட்டது நான் மட்டுமல்ல
என் கனவுகளும் தான்

அவன் உச்சத்தின்
எச்சம் சுமக்கவும்
உண்டதின் மிச்சம் செரிக்கவும்
மட்டுமே நான்

களையப்பட்ட ஆடை
,கவிழ்க்கப்பட்ட உடல்
கவனிப்பாரற்ற மனம்


அடுப்புக்கரி , அழுக்குத்துணி ,
அடுத்தடுத்து பிள்ளை , ஆரும்
அறியாத் தனிமை ..

தந்தி அறுந்த வீணையாய்
ஊமைப் புல்லாங்குழலாய்
பாவம் அவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை
இல்லை இல்லை வாசிக்க அறியவில்லை

உறங்காமலே விழித்து
உணர்வுகள் மறைத்து
உயிரோடு எனை உன்
உதடுக்குள் புதைத்து

உண்டாகி இருந்தாலும்
உன்னோடு கலந்து
இந்திரியம் நனைத்த உடை
நீயறியாமல் துவைத்து
ஊருக்காய் உறவுக்காய்
உபரியாய் சிரித்து
உடலும் உணர்வும் சிதற சிதற
கழுத்தும் வயிறும் கனக்க கனக்க


பொத்தி வைத்த என் உணர்வுகள்
கணம் தாங்காமல் வெளிவந்த போது
கண்ணகி என்றாய் கதை பல சொன்னாய்
மாதவியும் மங்கை என மனதிலும் நினையாய்


மாதம் தவறாமல் வரும் அம்மா
"உனக்கென்னடி குறை ?" என்பாள்
எப்போதாவது வரும் அப்பா
"எத்தனை பவுன்  இந்நகை?" என்பார்

ஊமையின் கனவை போல்
இந்த பொன் நகைக்காக
என் புன்னகை பறிக்கப்பட்டதை
யாரும் அறியார்

என் தங்கைக்கும் திருமணமாம்
ஆயிரம் ஆயிரமாய் சம்பளம்
ஆடம்பர வீடு , ஆங்கில பேச்சு ..

ஏனோ எனக்கு சொல்லத்தோன்றுகிறது
அவள் காதலனுக்காய் காத்திருந்தாள்
அவள் பெற்றோர் ஒரு கணவனை
கட்டிவைத்தார்கள் ...........
பாவம் வெறும் கணவனை கட்டி வைத்தார்கள்