January 29, 2011

இசையானவள்

இசையாக நீயிருந்தாய்  என் 
இரு செவி உட்புகுந்தாய்
இமை நடுவில் குடியிருந்து
இமை மூட தடையிருந்தாய்

கனவாக நீ இருந்தாய்  என்
கற்பனைக்கு உயிர் கொடுத்தாய்
கரம் பிடிக்க எண்ணி வந்தேன்
"நான் கன்னியல்ல கனவு " என்றாய்

இரவோடு ஒளி வீசும் தாரகையாய்
உன்  கண்கள் .
தாரகையை தோற்கடிக்கும் தன்மதியாய்
பிறை வதனம்
மதி மூடும் மலர் மஞ்சு தனை ஒத்த
கருங்கூந்தல்
நின் மனதோடு நான் இருந்தால்
பகலெல்லாம் பௌர்ணமிகள்

மாமன்னன் வாள் இணைய
கூறிய நின் நாசி
என் பசி மயக்கம் தீர்த்துவைக்க
சொல்லாயோ ஒரு சேதி

உலகத்து அழகையெல்லாம்
ஒரு வட்டில் வடித்தெடுத்து
உறை குத்தி கடைந்தெடுத்த
அமிர்தமாய் உன் உதடு
என் உயிர் உறைய வைக்குதடி
உறையிட்டு அதை மூடு

வளைவற்ற ஆடி யாய்
உண்டங்கே ஓர் கழுத்து
முகம் பார்க்க முயன்றாலோ
வழுக்கி விடும் தலையெழுத்து

மாறன் அம்புகளாய் வம்பு
செய்யும் வம்பிரண்டு
கோயில் கலசமாய்
வடிவெடுத்த பெண்ணழகு

இல்லாத இடை காட்டி
இம்சிக்கும் வஞ்சி
அவள் சொல்லடா மாட்டளோ
எனை கொஞ்சம் கொஞ்சி

இளம் காலை நேரத்து
தென்றலாய் தேகம்
இலையுதிர் காலத்து
மரமானேன் நானும்

இதமான குளிர் நேர
தேநீரும் நீதான்
எனை இரவோடு
முனகவைத்த
முகாரியும் நீதான்

உன் இதமான பார்வை போதும்
இம்மையிலும் மோட்சமடி
உன் இதழ் வார்த்தை போதுமடி
என் உயிர் பிரியும் உனதடியில்

10 comments:

  1. ஆக்கம் சிறப்பாக உள்ளது .... :)

    ReplyDelete
  2. மொழி வளம் அருமை அபரஞ்சி.

    ReplyDelete
  3. நன்றி தோழர்களே

    ReplyDelete
  4. இதெப்படி உங்களால் முடிந்தது? ஒரு ஆணாக இருந்து பெண்ணை ரசித்து, வர்ணித்து கவிதை எழுத? கட்டாயம் பதில் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  5. எப்படி முடிந்தது என்றால் என்ன பதில் சொல்வது ??
    ஒரு ரசிப்புத்தன்மை தான் காரணம் எனலாம்

    ReplyDelete
  6. :))
    எதிர்ப்பாலாய் இருந்து எழுதும்போது, நிச்சயமாக அது உண்மையான உணர்வுகளாக இருக்க வாய்ப்பில்லை, என்று நினைகின்றேன்..

    ReplyDelete
  7. அப்படி சொல்ல முடியாது ..நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு கொலையை பற்றி எழுதவேண்டும்
    என்றால் கொலை பண்ணி இருக்க வேண்டும்னு சொல்வது போல இருக்கிறது

    ReplyDelete
  8. நான் எல்ன சொல்லவந்தேனென்றால்,
    நீங்கள் உணர்ந்துபார்க்க முடியாத ஒரு விடயத்தை எழுதும்போது, பெருமளவும் உங்கள் அறிவைப் பாவித்தே எழுதுகின்றீர்கள் என்றேன்...

    நான், ஆணாக ஒரு பெண்ணை நோக்கி கவிதை எழுதுவேனாகில், அங்கே என்னுடைய உணர்வுகளின் பங்களிப்பு பெருமளவிற்கு இருக்கும், மாறாக என்னை ஒரு பெண்ணாக பாவித்து ஆணை நோக்கி கவிதை எழுதுவேனாகில் அங்கே என்னுடைய அறிவின் (நான் அறிந்தவற்றின்) பங்கே பெருமலவிற்கிருக்கும், உணர்வுகளின் பங்கு மிகக்குறைவாக...

    ஒரே விடயத்தை அரிவினால் எழுதுவதற்கும், உணர்வினால் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டென நினைக்கின்றேன்..

    ReplyDelete